Wednesday, November 13, 2013

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!


- பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேச்சு

        
          ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்சிக்கு இலக்கிய அணி செயலாளர் கோ.வெ. குமணன் அவர்கள் தலைமை ஏற்றார். புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு,  பி.ஏ. சிதம்பரம் முன்னிலை வகித்தார்கள்.

         இந்நிகழ்ச்சியில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுசெயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்ற தலைப்பில் பேசியதாவது , பெருநகரங்களில் நடைபெறும் புத்தக திருவிழாக்கள் போல இத்தகைய நகராட்சி அளவில் புன்செய் புளியம்பட்டியில் நடைபெறுவது பாராட்டுக்குரியது. இவ்விழாவை சிறப்பாக நடத்தி வரும் விடியல் சமூகநல இயக்கத்துக்கு எனது நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு 10 பதிப்பகங்கள் வந்துள்ளது. விரைவில் 100 பதிப்பகங்கள் வரும் அளவிற்கு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா சிறக்க எனது ஆசிகள். இன்றைக்கு இளைய தலைமுறையிடம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலை மாற வேண்டும். மாணவ மாணவியர்கள் புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை உணர வேண்டும். உலகில் தமிழ் மொழி போல் இனிதான மொழி எதுவும் இல்லை. லட்சகணக்கான தமிழ் புத்தகங்கள் உள்ளது. புத்தகம் படிப்பது பொழுது போக்குவதற்காக அல்ல. தேர்வுக்காக அல்ல. அது நமது வாழ்க்கையின் ஒரு பகுதி. பெற்றோர்கள் பிள்ளைகளை சரியாக வழி நடத்த வேண்டும். படிக்கும் பழக்கத்தை பிள்ளைகளிடம் கொண்டு செல்ல வேண்டும். அறிவுக்கு அடிப்படை மூன்று. மெய்யறிவு, நூலறிவு, பட்டறிவு. புத்தக அறிவு மட்டுமே ஒரு மனிதனை முழுமையாக்கி விடாது. அனுபவ அறிவுதான் ஒரு மனிதனை முழுமையாக்கும். 5 தாவது வரை படித்த காமராஜர் தான் 5 முறை தமிழக முதல்வராக இருந்து நல்ல பல திட்டங்களை தமிழகத்திற்கு தந்தவர். எனவே படித்த மேதைகளை போலேவே படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு. புத்தகத்தை கடமைக்காக படிக்கச் கூடாது. ஆதமார்தமாக படிக்க வேண்டும் என்றார். 

          எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் கதை அனுபவம் என்ற தலைப்பில் பேசும் போது, நமது சமூகம் கதை சொல்லி வளந்த சமூகம். குழந்தைகளுக்கு நிறைய கதைகளை பெற்றோர்கள் சொல்ல வேண்டும். கதைகள் கேட்பதால் குழந்தைகளின் கற்பனைத்திறன் வளர்கிறது. படிப்பு என்பது சுவாசம் போன்றது. நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தக கண்காட்சி கண்ணுக்கு விருந்து என்றால் மாலை நேர சொற்பொழிவுகள் செவிக்கு விருந்து. எனவே இத்தகைய புத்தக திருவிழாவை பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார். 
        இந்நிகழ்ச்சியில் விடியல் செயலர் எஸ்.ஜெயகாந்தன், விடியல் உறுப்பினர்கள் தருமராசு, லோகநாதன், சுபாசந்தர், சக்திவேல் , ரமேஷ்குமார், மகேஷ், வடிவேலன், நகரமன்ற உறுப்பினர் என்.முகமது உசேன், பி.கே.வெங்கடாசலம்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment