Wednesday, November 13, 2013

தன்னம்பிக்கை உள்ளவன் தனிநபர் ராணுவம்!

இன்று நீ தலை குனிந்து படிப்பதெல்லாம் நாளை நீ தலை நிமிர்ந்து நடபதற்காக தான்!
காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை! காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை!

************************************************************************************************************************
புன்செய்  புளியம்பட்டி புத்தக திருவிழாவில் சிந்தனை கவிஞர் கவிதாசன் பேச்சு
         ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் சூரியநாராயணன் எல்லாம் இன்பமயம் என்ற தலைப்பிலும், கொங்குபுயல் சாந்தாமணி கற்போம் கற்பிப்போம் என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர் கவிதாசன் முயற்சிகள் வெல்லும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது 
 
         
       
        அனைவருக்கும் வணக்கம். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றான் மகாகவி பாரதி. எங்கள் வாழ்வும், வளமும் மங்காத தமிழே என்று சங்கே முழங்கு என்றான் பாரதிதாசன். இவ்வாறாக முத்தமிழ் சங்கம் வளர்த்த தமிழுக்கு எனது முதல் வணக்கத்தை சமர்பிக்கிறேன்.
         புன்செய் புளியம்பட்டியில் சாதாரண மாணவர்களையும் சாதனை மனிதர்களாக மற்ற வேண்டும் என்பதற்காக விடியல் செயலர் ஜெயகாந்தனும், விடியல் உறுப்பினர்களும் இணைந்து புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்துகின்றனர். தனக்காக எதையும் செய்து கொள்ளாமல், இந்த மாணவ சமுதாயம் பயன்பெற வேண்டும் என செயல்படும் விடியல் சமூகநல இயக்கத்தை நான் பாராட்டுகிறேன்.

          இந்த உலகத்திலேயே நான் அதிகம் மதிப்பது தலைவர்களை அல்ல. விஞ்ஞானிகளை அல்ல. ஆசிரியர்களை அல்ல. நான் அதிகமாக மதிப்பது மாணவர்களை தான். ஏனென்றால் எழுதிய தாளை விட எழுதாத தாள் எவ்வளவோ சிறந்தது. அதில் எதை வேண்டுமானாலும் எழுதலாம். எதிர்காலத்தில் நீங்கள் எந்த பதவிக்கு வேண்டுமானால் வரலாம். எந்த உயரத்துக்கு வேண்டுமானாலும் போகலாம். நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல. எதிர்காலத்தில் சாதனை படைக்க போகிறவர்கள். கடந்த 20 ஆண்டுகளில் நான் 3 லட்சம் மாணவர்களை சந்தித்து உள்ளேன். நீங்கள் உங்களை பற்றி உயர்வாக பேச கூடாது. உலகம் உங்களை பற்றி உயர்வாக பேச வேண்டும்.

        மாணவர்கள் கவனித்து, சிந்தித்து செயல்பட வேண்டும். இளமையில் நீங்கள் வியர்வை சிந்தவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டும். மாணவர்கள் நல்ல புத்தகங்களை படியுங்கள்.  இன்று நீ தலை குனிந்து படிப்பதெல்லாம் நாளை நீ தலை நிமிர்ந்து நடபதற்காக தான். இன்று விடிய விடிய படிப்பதெல்லாம் நாளை விடியலில் சாதனை படைபதற்கு தான். சாதனை செய்ய தகுதி வேண்டும். தகுதி என்பது தன்னம்பிக்கை - குறிக்கோள் - திறமை ஆகியவற்றை குறிக்கும். இந்த மூன்றும் இருந்தால் நீங்கள் சாதனை மனிதர்கள் ஆகலாம். மாணவரகள் மருத்துவராக, பொறியாளராக, சாதனையாளராக ஆனால் மட்டும் போதாது. நல்ல மனிதர்களாக ஆக வேண்டும். என்னுடைய பிறப்பு தரித்திரமாக இருந்தாலும், என்னுடைய இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும்.

       ஒரு படகோட்டியின் மகன் பாரதத்தின் முதல் குடிமகனாக மாறினார். அவர்தான் டாக்டர் அப்துல்கலாம். நாம் என்ன சாதிக்கு பிறந்தோம் என்பது முக்கியமல்ல. என்ன சாதிக்க பிறந்தோம் என்பது தான் முக்கியம். மாணவரகள் பெற்றோர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் சொல்வதை கேட்பதில்லை. ஆனால் நண்பன் சொன்னால் கேட்கின்றான். உப்பில்லாமல் கூட வாழலாம். ஆனால் நல்ல நட்பு இல்லாமல் வாழ முடியாது. கண்ணீரை துடைப்பவன் அல்ல நல்ல நண்பன். கண்ணீரே வராமல் தடுப்பவன் தான் நல்ல நண்பன். எல்லோருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். என்னுடிய லட்சியம் லட்சியவதிகளை உருவாக்குவது தான். அந்த இலட்சியவாதிகளாக நீங்கள் வர வேண்டும்.

      தன்னம்பிக்கை வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். தன்னம்பிக்கை வேண்டும் என்றால் மூன்று குணங்கள் வேண்டும். நம்முடைய தோல்விகளுக்கு நாம் பொறுபேற்க வேண்டும். திறமைகள் வளர்த்து கொண்டே இருக்க வேண்டும். சுய பச்சாதாபம் இருக்க கூடாது. இவை தான் தன்னம்பிக்கை உருவாக காரணம்.
காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை! காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை! என்பதை மாணவரகள் உணர வேண்டும். முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும். விழாமல் இருபதல்ல வெற்றி! விழும் போது எழுவதுதான் வெற்றி! படுத்து கிடக்கிற சோம்பேறிக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசை எல்லாம் கிழக்கு தான். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறியதை போல தூக்கத்தில் வருவது அல்ல கனவு. நம்மை தூங்காமல் செய்வது தான் கனவு. மாணவரகள் அதிகாலையில் எழ வேண்டும். என்னால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது என்னால் முடியும்! எதையும் சாதிக்க என்னால் முடியம் என மாணவர்கள் தினமும் உச்சரிக்க வேண்டும்.

         மாணவர்கள் நேரத்தை விரயமாக கூடாது. நேற்று என்பது உடைந்த பானை. நாளை என்பது மதில் மேல் பூனை. இன்று என்பது உன் கையில் உள்ள வீணை. அதை உணர்ந்து கொண்டால் நீ தொட்டிடலம் வானை. நகர்ந்து கொண்டு இருப்பதால் தான் நதி அழகாக இருக்கிறது. வளர்ந்து கொண்டு இருப்பதால் தான் செடி அழகாக இருக்கிறது. அதை போல் முன்னேறி கொண்டு இருந்தால் தான் மனிதனாக இருக்க முடியும். மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல. முயற்சி செய்பவன்தான் மனிதன். 
முடிந்தவரை முயற்சிபதல்ல முயற்சி! எடுத்ததை முடிக்கும்வரை முயற்சிபதுதான் முயற்சி! தன்னம்பிக்கை உள்ளவன் தனிநபர் ராணுவம்.  சூழ்நிலைக்குள் கரைந்து போகின்றவன் சாதாரண மனிதன். சூழ்நிலையை கடந்து போகிறவன் சாதனை மனிதன். இவ்வாறு அவர் பேசினார்.         இந்நிகழ்ச்சியில் வெற்றிப்பாதை ஆசிரியர் கி.வேணுகோபால், நகர அ.தி.மு.க செயலாளர் எம்.கே.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.என்.ராஜேந்திரன், ம.தி.மு.க பவானிசாகர் ஒன்றிய செயலாளர் ஆர்.மயில்சாமி, பி.கே.சண்முகம், சச்சிதானந்த பள்ளி துணை முதல்வர் ஞானபண்டிதன், தபோவனம் பள்ளி முதல்வர் ஆர்.முத்துக்குமார்,  எஸ்.ஆர்.சி.பள்ளி முதல்வர் கே.திருமூர்த்தி, விடியல் செயலர் எஸ்.ஜெயகாந்தன், விடியல் உறுப்பினர்கள் தருமராசு, லோகநாதன்,  சக்திவேல் , ரமேஷ்குமார், சுபாசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவிஞர் நந்தலாலா, நெல்லை ஜெயந்தாவுக்கு நினைவுபரிசு



கவிஞர் நந்தலாலா, நெல்லை ஜெயந்தாவுக்கு நினைவுபரிசு
****************************************************************
புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியமைக்காக கவிஞர் நந்தலாலாவுக்கு விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் நினைவுபரிசு வழங்கியபோது எடுத்த படம். அருகில் கவிஞர் நெல்லை ஜெயந்தா, டாக்டர் சுப்ரமணியம், டாக்டர் மணி, டாக்டர் முத்துக்குமார், விடியல் உறுப்பினர்கள் தருமராசு, சக்திவேல் ஆகியோர் உள்ளனர்.

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!


- பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேச்சு

        
          ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்சிக்கு இலக்கிய அணி செயலாளர் கோ.வெ. குமணன் அவர்கள் தலைமை ஏற்றார். புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு,  பி.ஏ. சிதம்பரம் முன்னிலை வகித்தார்கள்.

         இந்நிகழ்ச்சியில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுசெயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்ற தலைப்பில் பேசியதாவது , பெருநகரங்களில் நடைபெறும் புத்தக திருவிழாக்கள் போல இத்தகைய நகராட்சி அளவில் புன்செய் புளியம்பட்டியில் நடைபெறுவது பாராட்டுக்குரியது. இவ்விழாவை சிறப்பாக நடத்தி வரும் விடியல் சமூகநல இயக்கத்துக்கு எனது நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு 10 பதிப்பகங்கள் வந்துள்ளது. விரைவில் 100 பதிப்பகங்கள் வரும் அளவிற்கு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா சிறக்க எனது ஆசிகள். இன்றைக்கு இளைய தலைமுறையிடம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலை மாற வேண்டும். மாணவ மாணவியர்கள் புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை உணர வேண்டும். உலகில் தமிழ் மொழி போல் இனிதான மொழி எதுவும் இல்லை. லட்சகணக்கான தமிழ் புத்தகங்கள் உள்ளது. புத்தகம் படிப்பது பொழுது போக்குவதற்காக அல்ல. தேர்வுக்காக அல்ல. அது நமது வாழ்க்கையின் ஒரு பகுதி. பெற்றோர்கள் பிள்ளைகளை சரியாக வழி நடத்த வேண்டும். படிக்கும் பழக்கத்தை பிள்ளைகளிடம் கொண்டு செல்ல வேண்டும். அறிவுக்கு அடிப்படை மூன்று. மெய்யறிவு, நூலறிவு, பட்டறிவு. புத்தக அறிவு மட்டுமே ஒரு மனிதனை முழுமையாக்கி விடாது. அனுபவ அறிவுதான் ஒரு மனிதனை முழுமையாக்கும். 5 தாவது வரை படித்த காமராஜர் தான் 5 முறை தமிழக முதல்வராக இருந்து நல்ல பல திட்டங்களை தமிழகத்திற்கு தந்தவர். எனவே படித்த மேதைகளை போலேவே படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு. புத்தகத்தை கடமைக்காக படிக்கச் கூடாது. ஆதமார்தமாக படிக்க வேண்டும் என்றார். 

          எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் கதை அனுபவம் என்ற தலைப்பில் பேசும் போது, நமது சமூகம் கதை சொல்லி வளந்த சமூகம். குழந்தைகளுக்கு நிறைய கதைகளை பெற்றோர்கள் சொல்ல வேண்டும். கதைகள் கேட்பதால் குழந்தைகளின் கற்பனைத்திறன் வளர்கிறது. படிப்பு என்பது சுவாசம் போன்றது. நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தக கண்காட்சி கண்ணுக்கு விருந்து என்றால் மாலை நேர சொற்பொழிவுகள் செவிக்கு விருந்து. எனவே இத்தகைய புத்தக திருவிழாவை பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார். 
        இந்நிகழ்ச்சியில் விடியல் செயலர் எஸ்.ஜெயகாந்தன், விடியல் உறுப்பினர்கள் தருமராசு, லோகநாதன், சுபாசந்தர், சக்திவேல் , ரமேஷ்குமார், மகேஷ், வடிவேலன், நகரமன்ற உறுப்பினர் என்.முகமது உசேன், பி.கே.வெங்கடாசலம்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

புத்தகங்களை இரவல் வாங்காமல் காசு கொடுத்து வாங்கி படிக்க வேண்டும்


- புன்செய்  புளியம்பட்டி புத்தக திருவிழாவில் கவிஞர் புவியரசு பேச்சு!

*********************************************************************************************************

        ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்சிக்கு அம்மா மெட்ரிக் பள்ளி செயலாளர் ராணி அன்பு அவர்கள் தலைமை தங்கினார். எஸ்.ஆர்.சி.மெட்ரிக் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெகதாம்பிகை, சித்ரா சுப்ரமணியம், கே.வி.கே.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.பழனிசாமி, நியூ சென்ட்சுரி புக் ஹவுஸ் மேலாளர் என்.ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

         விழாவில் இருமுறை சாகத்திய அகாடமி விருது வென்ற மூத்த எழுத்தாளர் கவிஞர் புவியரசு அவர்கள் கலந்து கொண்டு " நான் ஒரு வாசகன் " என்ற தலைப்பில் பேசும் போது, புன்செய் புளியம்பட்டிக்கு இன்று கடவுள் வந்து இருக்கிறார். நான் கடவுள் என்று சொல்வது புத்தகங்களை. நீங்கள் 10 புத்தகங்களை படித்தால் 11 வது புத்தகமாக நீங்கள் மதிக்கபடுவிர்கள் என்றார் ஈரோடு தமிழன்பன். நீங்கள் புத்தகங்களை இரவல் வாங்காமல் காசு கொடுத்து வாங்கி படிக்க வேண்டும்.  ஓயாமல் படித்து கொண்டிருக்கும் போது உங்கள் உலகம் வேறாகும். நீங்கள் நூல்களை வாசிக்கும் போது அதனோடு ஒன்றி விடுவிர்கள். அவர்களுடைய அனுபவம் உங்களுடைய அனுபவமாக மாறிவிடும். பயணம் தான் வாழ்கை. பயணம் தான் அனுபவம். எல்லோரும் போய் சேருமிடம் ஒன்றுதான். சிறகுகள் இருந்தும் பெங்குவின் பறவை பறக்காது. அதைபோல் மனிதனும் சிலசமயம் பெங்குவின் பறவை போல் முயற்சிக்காமல் இருந்து விடுகிறோம். நாம் எதை விதைகிறோமோ அதுவே முளைக்கும். அநியாயத்துக்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்கின்ற மனிதராக இளைய சமுதாயம் மாற வேண்டும்.
        இன்று தமிழனை போல் அடையாளம் இழந்து கொண்டு இருந்கின்றவர்கள் யாரும் இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். பிறமொழி சொற்கள் கலந்து பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்தி. இன்று நகரத்தின் நச்சு காற்று படாத இடமாக புன்செய் புளியம்பட்டி திகழ்கிறது. இங்கே நடைபெறும் புத்தக திருவிழா மிகவும் சிறப்புக்கு உரியது. இதனை நடத்து விடியல் சமூகநல இயக்கத்துக்கு எனது பாராட்டுகள்.தமிழில் புதிய புதிய நூல்கள் வந்தவண்ணம் உள்ளது. மு.வ., கல்கி, சாண்டில்யன், ந.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கரிச்சான்குஞ்சு, கோணங்கி என எல்லா எழுத்தாளர்களுடைய புத்தகங்களையும் வாங்கி மாணவ மாணவியர்கள் பயன் பெற வேண்டும் என்றார்.
     இந்நிகழ்ச்சியில் விடியல் செயலர் எஸ்.ஜெயகாந்தன், விடியல் உறுப்பினர்கள் தருமராசு, லோகநாதன், சுபாசந்தர், சக்திவேல் , ரமேஷ்குமார்  ஆகியோர் கலந்து கொண்டனர்

புத்தகம் இல்லாத வீடு ஆன்மா இல்லாத வீடு!

- புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு
*************************************************************************************************************
        ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் 5 நாட்கள் நடைபெற்றது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது.பட்டிமன்ற பேச்சாளர் மகேஸ்வரி சத்குரு கற்றலும் - கேட்டலும் என்ற தலைப்பில் பேசினார்.

      அதனை தொடர்ந்து குறும்பட இயக்குனர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் - புத்தகம் பேசுது என்ற தலைப்பில் பேசும் போது பொதுவாக புத்தக திருவிழாக்கள் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை போன்ற பெருநகரங்களில்தான் நடைபெறும். எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழகத்திலேயே 5 நாட்கள் புத்தக திருவிழாவை நடத்தும் பெருமை புன்செய் புளியம்பட்டிக்கு மட்டும் தான் உண்டு. இன்றைக்கு பொதுவாக சமூகம் தொலைகாட்சிகளின் பின்னால் முடங்கி கிடக்கும் சூழலில் இத்தகைய புத்தக கண்காட்சிகள் இளைய தலைமுறைக்கு வாசிக்கும் பழக்கத்தை கற்று கொடுக்கும் களமாக திகழ்கிறது.
          புத்தகம் என்பது வெறும் காகிதம் கிடையாது. வெறும் மை கிடையாது. வெறும் எழுத்து கிடையாது. அது நம் முன்னோர்களின் பண்பாடு, வரலாற்று தலைவர்களின் வாழ்கை. எல்லா பருவத்திற்கும் ஏற்றவாறு நமது வாழ்கை முறையை போதிப்பது தமிழ் வழியிலான புத்தகங்களே. ஒரு வரியில் ஆத்திசூடி, இரு வரியில் திருக்குறள், மூன்று வரியில் திருகடிகம், நான்கு வரியில் நாலடியார் , ஐந்து வரியில் சிறுபஞ்சமூலம், ஆறு வரியில் ஏனாதி என எத்தனையோ புத்தகங்கள் உள்ளது. செல்வத்தில் எல்லாம் சிறந்த செல்வம் புத்தகம். காந்தியடிகளை மகாத்மாவாக உயர்த்தியது புத்தகம் தான். அளப்பரிய தியாகங்களை செய்த இந்திய விடுதலை போராட்ட வீரர்களை நம் கண்முன்னே காட்டியது புத்தகங்கள் தான். புத்தகம் இல்லாத வீடு ஆன்மா இல்லாத வீடு. ஏனென்றால் புத்தகம் அறிவியல் பேசும், இலக்கியம் பேசும், வரலாறு பேசும் அனைத்தும் பேசும். ஒரு மனிதனை மானுடம் ஆக்குவது நாம் படிக்கும் புத்தகங்களே. எனவே புத்தகத்தை வாசிப்போம், வாழ்கையை நேசிப்போம் என்றார். இந்நிகழ்ச்சியில் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர். 

Tuesday, October 22, 2013

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா 2013 நாளிதழ் செய்திகள்

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா 2013 
நாளிதழ் செய்திகள்

********************************
















**************