Wednesday, November 13, 2013

தன்னம்பிக்கை உள்ளவன் தனிநபர் ராணுவம்!

இன்று நீ தலை குனிந்து படிப்பதெல்லாம் நாளை நீ தலை நிமிர்ந்து நடபதற்காக தான்!
காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை! காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை!

************************************************************************************************************************
புன்செய்  புளியம்பட்டி புத்தக திருவிழாவில் சிந்தனை கவிஞர் கவிதாசன் பேச்சு
         ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் சூரியநாராயணன் எல்லாம் இன்பமயம் என்ற தலைப்பிலும், கொங்குபுயல் சாந்தாமணி கற்போம் கற்பிப்போம் என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர் கவிதாசன் முயற்சிகள் வெல்லும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது 
 
         
       
        அனைவருக்கும் வணக்கம். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றான் மகாகவி பாரதி. எங்கள் வாழ்வும், வளமும் மங்காத தமிழே என்று சங்கே முழங்கு என்றான் பாரதிதாசன். இவ்வாறாக முத்தமிழ் சங்கம் வளர்த்த தமிழுக்கு எனது முதல் வணக்கத்தை சமர்பிக்கிறேன்.
         புன்செய் புளியம்பட்டியில் சாதாரண மாணவர்களையும் சாதனை மனிதர்களாக மற்ற வேண்டும் என்பதற்காக விடியல் செயலர் ஜெயகாந்தனும், விடியல் உறுப்பினர்களும் இணைந்து புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்துகின்றனர். தனக்காக எதையும் செய்து கொள்ளாமல், இந்த மாணவ சமுதாயம் பயன்பெற வேண்டும் என செயல்படும் விடியல் சமூகநல இயக்கத்தை நான் பாராட்டுகிறேன்.

          இந்த உலகத்திலேயே நான் அதிகம் மதிப்பது தலைவர்களை அல்ல. விஞ்ஞானிகளை அல்ல. ஆசிரியர்களை அல்ல. நான் அதிகமாக மதிப்பது மாணவர்களை தான். ஏனென்றால் எழுதிய தாளை விட எழுதாத தாள் எவ்வளவோ சிறந்தது. அதில் எதை வேண்டுமானாலும் எழுதலாம். எதிர்காலத்தில் நீங்கள் எந்த பதவிக்கு வேண்டுமானால் வரலாம். எந்த உயரத்துக்கு வேண்டுமானாலும் போகலாம். நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல. எதிர்காலத்தில் சாதனை படைக்க போகிறவர்கள். கடந்த 20 ஆண்டுகளில் நான் 3 லட்சம் மாணவர்களை சந்தித்து உள்ளேன். நீங்கள் உங்களை பற்றி உயர்வாக பேச கூடாது. உலகம் உங்களை பற்றி உயர்வாக பேச வேண்டும்.

        மாணவர்கள் கவனித்து, சிந்தித்து செயல்பட வேண்டும். இளமையில் நீங்கள் வியர்வை சிந்தவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டும். மாணவர்கள் நல்ல புத்தகங்களை படியுங்கள்.  இன்று நீ தலை குனிந்து படிப்பதெல்லாம் நாளை நீ தலை நிமிர்ந்து நடபதற்காக தான். இன்று விடிய விடிய படிப்பதெல்லாம் நாளை விடியலில் சாதனை படைபதற்கு தான். சாதனை செய்ய தகுதி வேண்டும். தகுதி என்பது தன்னம்பிக்கை - குறிக்கோள் - திறமை ஆகியவற்றை குறிக்கும். இந்த மூன்றும் இருந்தால் நீங்கள் சாதனை மனிதர்கள் ஆகலாம். மாணவரகள் மருத்துவராக, பொறியாளராக, சாதனையாளராக ஆனால் மட்டும் போதாது. நல்ல மனிதர்களாக ஆக வேண்டும். என்னுடைய பிறப்பு தரித்திரமாக இருந்தாலும், என்னுடைய இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும்.

       ஒரு படகோட்டியின் மகன் பாரதத்தின் முதல் குடிமகனாக மாறினார். அவர்தான் டாக்டர் அப்துல்கலாம். நாம் என்ன சாதிக்கு பிறந்தோம் என்பது முக்கியமல்ல. என்ன சாதிக்க பிறந்தோம் என்பது தான் முக்கியம். மாணவரகள் பெற்றோர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் சொல்வதை கேட்பதில்லை. ஆனால் நண்பன் சொன்னால் கேட்கின்றான். உப்பில்லாமல் கூட வாழலாம். ஆனால் நல்ல நட்பு இல்லாமல் வாழ முடியாது. கண்ணீரை துடைப்பவன் அல்ல நல்ல நண்பன். கண்ணீரே வராமல் தடுப்பவன் தான் நல்ல நண்பன். எல்லோருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். என்னுடிய லட்சியம் லட்சியவதிகளை உருவாக்குவது தான். அந்த இலட்சியவாதிகளாக நீங்கள் வர வேண்டும்.

      தன்னம்பிக்கை வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். தன்னம்பிக்கை வேண்டும் என்றால் மூன்று குணங்கள் வேண்டும். நம்முடைய தோல்விகளுக்கு நாம் பொறுபேற்க வேண்டும். திறமைகள் வளர்த்து கொண்டே இருக்க வேண்டும். சுய பச்சாதாபம் இருக்க கூடாது. இவை தான் தன்னம்பிக்கை உருவாக காரணம்.
காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை! காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை! என்பதை மாணவரகள் உணர வேண்டும். முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும். விழாமல் இருபதல்ல வெற்றி! விழும் போது எழுவதுதான் வெற்றி! படுத்து கிடக்கிற சோம்பேறிக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசை எல்லாம் கிழக்கு தான். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறியதை போல தூக்கத்தில் வருவது அல்ல கனவு. நம்மை தூங்காமல் செய்வது தான் கனவு. மாணவரகள் அதிகாலையில் எழ வேண்டும். என்னால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது என்னால் முடியும்! எதையும் சாதிக்க என்னால் முடியம் என மாணவர்கள் தினமும் உச்சரிக்க வேண்டும்.

         மாணவர்கள் நேரத்தை விரயமாக கூடாது. நேற்று என்பது உடைந்த பானை. நாளை என்பது மதில் மேல் பூனை. இன்று என்பது உன் கையில் உள்ள வீணை. அதை உணர்ந்து கொண்டால் நீ தொட்டிடலம் வானை. நகர்ந்து கொண்டு இருப்பதால் தான் நதி அழகாக இருக்கிறது. வளர்ந்து கொண்டு இருப்பதால் தான் செடி அழகாக இருக்கிறது. அதை போல் முன்னேறி கொண்டு இருந்தால் தான் மனிதனாக இருக்க முடியும். மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல. முயற்சி செய்பவன்தான் மனிதன். 
முடிந்தவரை முயற்சிபதல்ல முயற்சி! எடுத்ததை முடிக்கும்வரை முயற்சிபதுதான் முயற்சி! தன்னம்பிக்கை உள்ளவன் தனிநபர் ராணுவம்.  சூழ்நிலைக்குள் கரைந்து போகின்றவன் சாதாரண மனிதன். சூழ்நிலையை கடந்து போகிறவன் சாதனை மனிதன். இவ்வாறு அவர் பேசினார்.         இந்நிகழ்ச்சியில் வெற்றிப்பாதை ஆசிரியர் கி.வேணுகோபால், நகர அ.தி.மு.க செயலாளர் எம்.கே.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.என்.ராஜேந்திரன், ம.தி.மு.க பவானிசாகர் ஒன்றிய செயலாளர் ஆர்.மயில்சாமி, பி.கே.சண்முகம், சச்சிதானந்த பள்ளி துணை முதல்வர் ஞானபண்டிதன், தபோவனம் பள்ளி முதல்வர் ஆர்.முத்துக்குமார்,  எஸ்.ஆர்.சி.பள்ளி முதல்வர் கே.திருமூர்த்தி, விடியல் செயலர் எஸ்.ஜெயகாந்தன், விடியல் உறுப்பினர்கள் தருமராசு, லோகநாதன்,  சக்திவேல் , ரமேஷ்குமார், சுபாசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment