Wednesday, November 13, 2013

புத்தகம் இல்லாத வீடு ஆன்மா இல்லாத வீடு!

- புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு
*************************************************************************************************************
        ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் 5 நாட்கள் நடைபெற்றது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது.பட்டிமன்ற பேச்சாளர் மகேஸ்வரி சத்குரு கற்றலும் - கேட்டலும் என்ற தலைப்பில் பேசினார்.

      அதனை தொடர்ந்து குறும்பட இயக்குனர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் - புத்தகம் பேசுது என்ற தலைப்பில் பேசும் போது பொதுவாக புத்தக திருவிழாக்கள் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை போன்ற பெருநகரங்களில்தான் நடைபெறும். எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழகத்திலேயே 5 நாட்கள் புத்தக திருவிழாவை நடத்தும் பெருமை புன்செய் புளியம்பட்டிக்கு மட்டும் தான் உண்டு. இன்றைக்கு பொதுவாக சமூகம் தொலைகாட்சிகளின் பின்னால் முடங்கி கிடக்கும் சூழலில் இத்தகைய புத்தக கண்காட்சிகள் இளைய தலைமுறைக்கு வாசிக்கும் பழக்கத்தை கற்று கொடுக்கும் களமாக திகழ்கிறது.
          புத்தகம் என்பது வெறும் காகிதம் கிடையாது. வெறும் மை கிடையாது. வெறும் எழுத்து கிடையாது. அது நம் முன்னோர்களின் பண்பாடு, வரலாற்று தலைவர்களின் வாழ்கை. எல்லா பருவத்திற்கும் ஏற்றவாறு நமது வாழ்கை முறையை போதிப்பது தமிழ் வழியிலான புத்தகங்களே. ஒரு வரியில் ஆத்திசூடி, இரு வரியில் திருக்குறள், மூன்று வரியில் திருகடிகம், நான்கு வரியில் நாலடியார் , ஐந்து வரியில் சிறுபஞ்சமூலம், ஆறு வரியில் ஏனாதி என எத்தனையோ புத்தகங்கள் உள்ளது. செல்வத்தில் எல்லாம் சிறந்த செல்வம் புத்தகம். காந்தியடிகளை மகாத்மாவாக உயர்த்தியது புத்தகம் தான். அளப்பரிய தியாகங்களை செய்த இந்திய விடுதலை போராட்ட வீரர்களை நம் கண்முன்னே காட்டியது புத்தகங்கள் தான். புத்தகம் இல்லாத வீடு ஆன்மா இல்லாத வீடு. ஏனென்றால் புத்தகம் அறிவியல் பேசும், இலக்கியம் பேசும், வரலாறு பேசும் அனைத்தும் பேசும். ஒரு மனிதனை மானுடம் ஆக்குவது நாம் படிக்கும் புத்தகங்களே. எனவே புத்தகத்தை வாசிப்போம், வாழ்கையை நேசிப்போம் என்றார். இந்நிகழ்ச்சியில் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர். 

No comments:

Post a Comment